பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 1 : சிலாங்கூரில், விலங்குகளுக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு கொடுமையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லது சகித்துக் கொள்ளப்படாது.
அது யாராக இருந்தாலும் அச்செயல் சகித்துக் கொள்ளப்படாது என சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி தெரிவித்தார்.
சிலாங்கூர் விலங்கு வதை தடுப்புச் சங்கத்தின் (SPCA) கீழ் இயங்கும் 'தெருவிலங்குகள் இல்லா சிலாங்கூர்' (Stray Free Selangor) பிரச்சாரத்தின் அரச புரவலராக இருக்கும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், சமீபகாலமாக வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தெருவிலங்குகள், குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான சம்பவங்கள் குறித்து தனது ஆழந்த சோகம், ஏமாற்றம் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
விலங்கு வதை என்பது சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அது ஒரு நாகரீக சமூகம் இரக்க உணர்வைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட தோல்வியையும் பிரதிபலிப்பதாக சிலாங்கூர் அரச அலுவலகத்தின் பேஸ்புக் பதிவில் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் வலியுறுத்தியிருக்கிறார்.
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும், எந்த இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அல்லது என்ன காரணம் கூறப்பட்டாலும், விலங்குகளுக்கு எதிரான எந்தவொரு கொடுமையும் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது பொறுத்துக் கொள்ளப்படாது.
"இது தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை."
"ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் உட்பட, விலங்குகளுக்கு எதிராகக் கொடுமை இழைத்ததாகக் கண்டறியப்படும் எந்தவொரு தரப்பினரும், முழுமையாக விசாரிக்கப்பட்டு, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
மேலும், அமலாக்க நிறுவனங்களின் செயல்பாடுகள் தேவையற்ற வன்முறை அல்லது விலங்குகளுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் செயல்களின் மூலம் அல்லாமல், தொழில்முறை, நேர்மை மற்றும் இரக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போது மட்டுமே அவற்றின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக அரசாங்கம், ஊராட்சி தரப்பு, விலங்கு நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் அழைப்பு விடுத்தார்.
விலங்கு வதை குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையானதாகவும், சீராக அமல்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக, 2015-ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் (Animal Welfare Act 2015) கீழ் உள்ள தண்டனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.







