ஈப்போ, ஜூலை 31 - கடந்த ஜூலை 24-ஆம் தேதி சுங்கை பாரி, பூந்தோங் பகுதியில் கைவிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரு மாணவிகளின் குடும்பத்தினர், அப்பகுதியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த கீர்த்திஷா (வயது 14) மற்றும் அவரது தோழி ராஜேனா (வயது 14) ஆகியோரின் மரணம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகக் கீர்த்திஷாவின் தந்தை டி. தயாளராஜ் (37) தெரிவித்தார்.
அந்தக் கைவிடப்பட்ட குடியிருப்புக்கு வேலிகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி எளிதில் நுழையும் வகையில் அது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள், குறிப்பாகச் சிறுவர்கள் அந்த இடத்திற்குள் தன்னிச்சையாக நுழைவதைத் தடுக்கும் வகையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வேலி அமைக்கப்பட்டு, பொறுப்புள்ள தரப்பினரால் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
மரணமடைந்த ராஜேனாவின் தந்தையான ஏ. சசிகரனும் (36) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, பூந்தோங்கில் நீண்ட காலமாகப் பாழடைந்து கிடக்கும் 15 மாடிகளைக் கொண்ட சுங்கை பாரி குடியிருப்பு, அப்பகுதியின் மீள்வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கத் போதுமான தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தயாளராஜ் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தப் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தை மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.







