பேராக், ஜூலை 31 - பேராக், ஈப்போவில் உள்ள பண்டார் பாரு தம்புன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் படுக்கையறையில், 46 வயது மதிக்கத்தக்க தாயும் அவரது 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகள்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 9.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில், உயிரிழந்தவர்களின் உடலில் எந்தவொரு காயமோ அல்லது குற்றச் செயலுக்கான தடயங்களோ கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இப்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாதத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் முகமட் நஜிப் ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார்.







