கோலாலம்பூர், ஜனவரி 5- கடந்த சனிக்கிழமை செந்தூலில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை புகார் கிடைத்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார். "ஐந்து வயதுடைய பாதிக்கப்பட்ட அக்குழந்தை தலை, காது, கண், கை, கால் மற்றும் முன் பற்கள் உடைந்த நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
"மேலும் ஆரம்பகட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த இரண்டு வாரங்களாகத் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபர் இந்த வியாழக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரணைக்கு உதவ இது செய்யப்பட்டுள்ளது.


