கோலாலம்பூர், ஜனவரி 7- கடந்த வாரம் தனது மகளை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இல்லத்தரசி ஒருவர் இன்று குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட நோர்ஷாஸ்லினா இஸாம்லி (22), சம்பவத்தின் போது ஐந்து வயது 11 மாதங்களான தனது மகளை, கடந்த ஜனவரி 2ஆம் தேதி மாலை 5 மணியளவில், செந்தூலில் உள்ள ஜாலான் செந்தூல் பெலாங்கி, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிபதி மஸுலியானா அப்துல் ரஷீட், குற்றஞ்சாட்டப்பட்டவரை RM10,000 பிணைத்தொகையுடன் ஒரு பிணையாளரின் கீழ் பிணையில் விடுவிக்க அனுமதித்து, ஜனவரி 28ஆம் தேதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்டார். கடந்த திங்கட்கிழமை, ஜனவரி 2ஆம் தேதி நடந்த துன்புறுத்தல் சம்பவம் குறித்து புகார் கிடைத்ததை அடுத்து, 22 வயதுடைய பெண்ணை காவல்துறை கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


