கோலாலம்பூர், ஜூலை 10 : வேலை நேரத்தில் அல்லாத விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் (Skim Kemalangan Bukan Bencana Kerja - Lindung 24 Jam) தொடர்ந்து பங்களிக்க விரும்பாத தொழிலாளர்கள், விலக்கு படிவத்தை நிரப்ப வேண்டும்.
இந்தத் திட்டத்திலிருந்து விலக விரும்பும் தொழிலாளர்கள், பொறுப்புத் துறப்புச் சான்றிதழாக கருதும் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
அதற்கான படிவம் வரும் திங்கட்கிழமை முதல் இணையதளத்தில் கிடைக்கும் என சொக்சோ - சமூக பாதுகாப்பு அமைப்பின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் அஸ்மான் அஜீஸ் மொஹமட் தெரிவித்தார்.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'லிண்டுங் 24 ஜாம்' திட்டம், முதலாளிகளால் பெரும்பான்மை பங்களிப்பு செய்யப்படும் வழக்கமான சொக்சோ திட்டங்களைப் போலன்றி, முழுமையாகத் தொழிலாளர்களே பங்களிப்பு செய்ய வேண்டும்.
பங்களிப்பு விகிதம் மாதச் சம்பளத்தில் 0.75% விழுக்காட்டில் தொடங்கி, மூன்றாவது ஆண்டில் 1% விழுக்காடாகவும் ஆறாவது ஆண்டிலிருந்து 1.25% விழுக்காடாகவும் உயரும்.
மாதத்திற்கு 3,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு,பெர்கேசோ பங்களிப்புத் தொகை மாதத்திற்கு 22 ரிங்கிட் 50 சென் முதல் 37 ரிங்கிட் 50 சென் வரை இருக்கும்.
இது நேரடியாகச் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
முதலாளிகள் இந்தத் தொகையை வழக்கம்போல இதர மாதாந்திர பங்களிப்புகளுடன் சேர்த்து சொக்சோவிற்கு செலுத்துவார்கள்.
இதனால் தகுதியுள்ள தொழிலாளர்கள் தனியாக காப்பீட்டு திட்டத்தை எடுக்காமல் பா துகாப்பைப் பெற முடியும்.






