கோலாலம்பூர், ஜூலை 29 : இயற்கை வள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு, நாடு தழுவிய அளவில் மலையேற்ற விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.
விபத்துகளைக் குறைப்பதற்கும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான செலவுகளை மிச்சப்படுத்துவதற்கும் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதில் அதிக ஆபத்துள்ள மலைப் பகுதிகளில் ஒரே நாளில் ஏறும் 'டே ஹைக்' (Day Hike) அல்லது 'கம்ப்ரெஸ்டு ஹைக்' (Compressed Hike) போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுமென துணை அமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோஹ் மக்களவையில் தெரிவித்தார்.
சில மலையேறுபவர்கள் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது, சமூக ஊடகங்களின் தற்காலிக ட்ரெண்டுகளைப் பின்பற்ற ஆசைப்படுவது மற்றும் அனுமதி இன்றி புதிய காட்டுப் பாதைகளை ஆராய முற்படுவதுமே அவர்கள் காடுகளில் சிக்கித் தவிப்பதற்கும் அவசரநிலைகள் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணங்களாக அமைகின்றன என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் மலையேறுபவர்கள் பாதையைத் தவறி காணாமல் போவதையும், விபத்துக்குள்ளாவதையும் தடுப்பதாகும். இதன் மூலம் அதிக செலவு மற்றும் மனிதவளத்தைக் கோரும் மீட்புப் பணிகளின் தேவையைக் குறைக்க முடியும்.
அதிகப்படியான சோர்வு, வழி தவறுதல் மற்றும் அவசரநிலைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கையாக அவற்றைத் தடுப்பதே இந்த புதிய அணுகுமுறையின் இலக்காகும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பேராக் மாநில வனத்துறை ஆபத்தான பகுதிகளில் 'கம்ப்ரெஸ்டு ஹைக்' நடவடிக்கைகளைத் தடை செய்துள்ளதுடன், வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகளைத் தடை செய்துள்ளதாக சையத் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், தனிநபர் உடல்நலத் தகுதி, மருத்துவ அறிக்கை, மற்றும் காப்பீட்டு விவரங்களைச் சரிபார்க்க முன்கூட்டியே பரிசோதனை செய்யும் நடைமுறையை அரசாங்கம் பலப்படுத்தும்.
கினபாலு மற்றும் கூனோங் தஹான் மலைகள் ஏறுவதற்கு முன்பு, உயர்வான இடங்களால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக துணையமைச்சர் கூறினார்.








