ஷா ஆலம், ஜூன் 13: சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து வகையான மலை ஏறும் நடவடிக்கைகளும் (Hiking) முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் தகவலைச் சிலாங்கூர் மாநில வனத்துறை (JPNS) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதிக ஆபத்து நிறைந்த 'டிரான்ஸ் ஹைக்கிங்' (Trans Hiking) மற்றும் 'ஹைக்கிங் கம்ப்ரஸ்' (Hiking Compress) ஆகிய இரு குறிப்பிட்ட மலை ஏறும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையின் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் மாநிலப் பூங்காக்கள் பிரிவின் முதன்மை உதவி அதிகாரி அப்துல் நாசிர் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நோட்டீஸைத் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தவறான புரிதலை அவர் சுட்டிக்காட்டினார்.
'டிரான்ஸ் ஹைக்கிங்' என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகளில் ஏறுவதையும், சில நேரங்களில் மாநில எல்லைகளைக் கடந்து பயணிப்பதையும் குறிக்கும் என்று அவர் விளக்கினார். அதேவேளையில், பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் எடுக்கக்கூடிய மலை ஏறும் பயணத்தை, ஒரே நாளுக்குள் அதிவேகமாக முடிப்பதே 'ஹைக்கிங் கம்ப்ரஸ்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த இரு நடவடிக்கைகளைத் தவிர, மற்ற சாதாரண மலை ஏறும் நடவடிக்கைகளுக்கு வழக்கம்போல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மலைப் பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் மலையேறிகள் வழக்கம் போல அனுமதிச் சீட்டு (Permit) பெற்றால் போதும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் ஜஸ்லிண்டா என்ற மலையேறிக்கு நேர்ந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை இந்தத் தற்காலிகத் தடை அமலில் இருக்கும் என்று ஊடகங்களிடம் பேசிய அப்துல் நாசிர் தெரிவித்தார். பொதுவாக, ஆண்டு இறுதியில் ஏற்படும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே மலை ஏறும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், பருவமழை இல்லாத காலத்தில் இத்தகைய தற்காலிகத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த இரு மலை ஏறும் முறைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், மலையேறிகளின் சமூகத்திடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கைகளை அடுத்து கடந்த காலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டன. எனினும், அண்மையக் காலங்களாகப் பதிவாகும் பெரும்பாலான மலை ஏறும் விபத்துகளும், மலையேறிகள் காடுகளில் வழிதவறிச் செல்லும் சம்பவங்களும் இந்த 'டிரான்ஸ் ஹைக்கிங்' மற்றும் 'ஹைக்கிங் கம்ப்ரஸ்' நடவடிக்கைகளிலேயே அதிகம் நடப்பதாக வனத்துறை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, 'டிரான்ஸ் ஹைக்கிங்' முறையில் பல மாநில எல்லைகளைக் கடக்க வேண்டியிருப்பதால், அனுபவமில்லாத மலையேறிகள் இதில் பங்கேற்கும்போது ஆபத்துகள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வந்தாலும், அவர்களின் பாதுகாப்புக்கே தங்களின் துறை எப்போதும் முதலிடம் வழங்கும் என்று அப்துல் நாசிர் இஸ்மாயில் தெளிவுபடுத்தினார்.







