காட்டில் வழி தவறாமல் இருக்க தெரிந்துகொள்ள வேண்டியவை – டத்தோ மகேந்திரனின் ஆலோசனைகள்

11 ஜூலை 2026, 1:00 AM
காட்டில் வழி தவறாமல் இருக்க தெரிந்துகொள்ள வேண்டியவை – டத்தோ மகேந்திரனின் ஆலோசனைகள்

ஷா ஆலாம், ஜூலை 11 - மலேசியாவில் சமீப காலமாக மலை ஏறும் நடவடிக்கையின் போது வழிதவறும் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று என்று டத்தோ மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மலை ஏறும் நடவடிக்கை என்பது உடல் வலிமையை மட்டும் சார்ந்தது அல்ல; சரியான திட்டமிடல், அனுபவம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும் என மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் கூறினார்.

மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபடும் முன் முழுமையான திட்டமிடல் இருக்க வேண்டும். எந்த மலைக்கு செல்ல வேண்டும், அந்த இடம் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறதா, யாருடன் செல்கிறோம், அவர்களுக்கு அனுபவம் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

இந்த நடவடிக்கையில் புதிதாக ஈடுபடுவோர்கள் கடினமான மலைப்பாதைகளைத் தேர்வு செய்யக்கூடாது. அவர்களின் உடல் திறன் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற எளிய பாதைகளைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது. மேலும், மலை ஏறும் நடவடிக்கையின் கால அளவைப் பொருத்து முன் ஏற்பாடுகள் வேறுபடும் என்பதால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்றார்.

மலை ஏறும் நடவடிக்கையை அதிகாலையிலேயே தொடங்குவது மிகவும் முக்கியம்; காரணம் இரவு நேரம் வருவதற்கு முன்பே பயணத்தை முடிக்க முடியும். மலேசியாவின் அடர்ந்த காடுகளில் மரங்கள் மிகவும் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதால், சூரிய ஒளி விரைவாக மறைந்துவிடும். அதன் காரணமாக காட்டுப் பகுதிகளில் இருள் சீக்கிரமே சூழ்ந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் கடிகாரம், கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்கள் உதவியாக இருந்தாலும், அவற்றை மட்டும் முழுமையாக நம்பி பயணம் செய்யக்கூடாது. பேட்டரி தீர்ந்துவிடுதல் அல்லது சிக்னல் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள பல மலைப்பகுதிகளுக்கு செல்லும் முன் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக இருக்கும். இதன் மூலம் காட்டுக்குள் சென்றவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுவதால், அவசரநிலைகளில் தேடுதல் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

மேலும், ஒருபோதும் தனியாக மலை ஏறும் செல்லக்கூடாது. குழுவாகச் செல்வது மிகவும் பாதுகாப்பானது. குழுவில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மலை ஏறும் நடவடிக்கைக்குச் செல்லும் முன் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களையும் டத்தோ மகேந்திரன் பட்டியலிட்டார். நல்ல தரமான காலணிகள், வெளிர் நிற ஆடைகள், தலைவிளக்கு (Head Torch), போதுமான குடிநீர், சிற்றுண்டிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் தேவையான மருந்துகள் ஆகியவை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

குறிப்பாக, கருப்பு அல்லது காடு போன்ற பச்சை நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிற ஆடைகள் அணிந்தால் அவசரநிலையில் மீட்புப் படையினர் எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

காட்டில் வழிதவறினால் என்ன செய்ய வேண்டும்?

வழி தவறியதாக உணர்ந்தவுடன் உடனடியாக அங்கேயே நின்றுவிட வேண்டும். மேலும் முன்னோக்கி செல்ல முயற்சிக்கக் கூடாது. தாங்கள் நின்ற இடத்தை அடையாளம் காணும் வகையில் அருகிலுள்ள கிளைகளை உடைப்பது அல்லது வேறு அடையாளம் வைப்பது உதவியாக இருக்கும்.

அதன் பின்னர், தாங்கள் வந்த பாதையைப் பின்தொடர்ந்து (Back Track) முக்கிய சந்திப்புப் பகுதிக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும். அந்த இடத்தில் காத்திருந்தால் குழுவில் உள்ள மற்றவர்கள் அல்லது மீட்புக் குழுவினர் தேடி வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றார் டத்தோ மகேந்திரன்.

மலை இறங்கும் வழியில் வழி தவறியிருந்தால், சில சந்தர்ப்பங்களில் மீண்டும் மேல்நோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஏனெனில், மேலிருந்து மனிதர்களின் நடமாட்ட அடையாளங்கள் மற்றும் வழிகாட்டும் குறியீடுகள் தெளிவாகக் காணப்பட வாய்ப்புள்ளது என்று அவர் விளக்கினார்.

மலை ஏறும் நடவடிக்கையின் போது எப்போதும் சுற்றுப்புற சூழலையும், தங்களுடன் பயணம் செய்பவர்களையும் நன்கு அறிந்திருக்க இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் பெரும்பாலான விபத்துகளையும், வழிதவறும் சம்பவங்களையும் தவிர்க்க முடியும் என டத்தோ மகேந்திரன் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.