சியோல், ஜூலை 29: தென் கொரியாவின் தலைநகரான சியோல் நகரில் நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிகாரப்பூர்வமாக வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த கோடை காலத்தில் சியோல் நகரில் பிறப்பிக்கப்படும் இரண்டாவது வெப்ப அலை எச்சரிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாகத் தீவிரமடைந்து வரும் வெப்ப அலையைத் தொடர்ந்து, சியோலின் கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளுக்கான வெப்ப அலை அறிவுறுத்தலை நிர்வாகம் இன்று காலை 11 மணிக்கு முழுமையான எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் வெப்ப அலை எச்சரிக்கையை கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டுஅல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு அதிகபட்ச உணரப்படும் வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் இந்த வெப்ப அலை எச்சரிக்கை வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மதியம் 1 மணிக்கு சியோலின் தெற்குப் பகுதியில் உணரப்பட்ட வெப்பநிலையானது 34.8 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதாக கொரியா வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடக்கு பசிபிக் பெருங்கடல் உயர் அழுத்த மண்டலம் மற்றும் திபெத்திய உயர் அழுத்த மண்டலம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுத்திய தாக்கமே இந்த தீவிர வெப்ப அலைக்கு முக்கியக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த கடுமையான வானிலை நிலை அடுத்த வார இறுதி வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






