கோலாலம்பூர், ஜூலை 7 - மலேசியாவில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இன்று வரை நாடு முழுவதும் கடுமையான வெப்ப காலநிலை காரணமாக 73 பேருக்கு வெப்பம் சார்ந்த நோய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) நோய் கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார மருத்துவ நிபுணர் டாக்டர் ஹஸ்லினா யஹாயா தெரிவித்துள்ளார்.
இந்த மொத்த பாதிப்புகளில் 59 பேருக்கு வெப்ப சோர்வு (Heat exhaustion), 6 பேருக்கு உடலுழைப்பால் ஏற்படும் கடுமையான வெப்ப பக்கவாதம் (Exertional heat stroke), 4 பேருக்கு இயல்பான வெப்ப பக்கவாதம் (Classical heat stroke) ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரசவத்திற்குப் பிந்தைய பத்தியக் காலத்தில் இருந்த இருவருக்கு மிக அதிக அளவிலான காய்ச்சல் (Hyperpireksia) பாதிப்பும், மற்ற இருவருக்கு வெப்ப பிடிப்பு (Heat cramps) பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
வெப்ப அலையால் ஏற்பட்ட ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை நான்காகவே நீடிக்கிறது என்று உறுதிப்படுத்தினார்.
இந்தச் சூழலைக் கையாள, பொது சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவப் பணியாளர்கள், சிகிச்சை வசதிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகவும் திறம்படவும் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அதிக ஆபத்துள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாப்பதற்காக, வெப்பம் சார்ந்த நோய்களின் பாதிப்புகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.






