கோலாலம்பூர், ஜூலை 29 — மேற்கு ஆசிய மோதல்களினால் எரிவாயு விநியோகத்தில் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கிவரும் வங்காளதேச நாட்டிற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவை (LNG) வழங்குவதற்கும், அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மலேசியாவின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.
இதில் குறிப்பாக, பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கும்படி அந்நாட்டின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது இந்த முக்கியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வங்காளதேச நாட்டின் பிரதமரான தாரிக் ரஹ்மான் தமக்குத் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு இந்த நிலவரத்தைத் தெரிவித்ததாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக பரஸ்பரப் பயனைத் தரும் எரிவாயு மற்றும் முதலீட்டுத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்தாலோசித்துள்ளனர்.
இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் ஏற்கனவே வங்காளதேசத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அண்மையில் ஒரு தொழில்துறை ஆலையில் நேரிட்ட எதிர்பாராத விபத்து அந்நாட்டின் எரிவாயு விநியோகச் சிக்கலை மேலும் மோசமடைய செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.







