பெட்டாலிங் ஜெயா, ஜூலை 27 - 44 வயது தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி 8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு மிரட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கார் துப்புரவு மையத்தின் உரிமையாளரான 45 வயது ஏ. ரவிச்சந்திரன், ஆர். இளங்கோவன் (45), எம். ஜெயராஜ் (43), மோசஸ் டி பிரிட்டோ ஜான் பேட்ரிக் (40), ஜியாவுடின் (33) மற்றும் (இ-ஹெயிலிங்) ஓட்டுநரான முகமட் அஃபிக் சஃபின் (36) ஆகிய ஆறு பேர் மீது இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி சியாஹிசா வர்ணோ முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆறு பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்டனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 34 உடன் 1961ஆம் ஆண்டு கடத்தல் சட்டப்பிரிவு 3(1)-இன் கீழ் இவர்கள் மீதான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத் தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
தலைமறைவாக உள்ள மேலும் ஏழு நபர்களுடன் இணைந்து இந்த ஆறு பேரும், கடந்த ஜூலை 16ஆம் தேதி டத்தாரான் சன்வே பகுதியில் உள்ள நாசி கண்டார் உணவகம் ஒன்றில் வைத்து சியூ கொக் மூன் (Chui Kok Mun) என்பவரைக் கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள மற்ற ஏழு சந்தேக நபர்களைத் தேடும் தீவிர நடவடிக்கைகளில் காவல் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.







