ஷா ஆலாம், ஜூலை 27: அம்பாங், தாசிக் பெர்மாய் பகுதியில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள வடிகால் அமைப்பு மேம்பாட்டுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அம்பாங்கில் தொடங்கி ஜாலான் பெர்மாய் 1 வரை உள்ள வடிகால் அமைப்புகளைச் சீரமைக்கும் இந்தப் பணிகள் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது என்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) மண்டலம் 19 இன் மன்ற உறுப்பினர் முகமட் பிர்தௌஸ் பாப் தெரிவித்தார்.
தெரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹாவூர் அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் அடிப்படையிலேயே இந்த அவசரத் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.







