ஷா ஆலாம், ஜூலை 14 – அம்பாங் இலகு ரயில் போக்குவரத்து (LRT) நிலையத்திற்கு அருகிலுள்ள ஜாலான் அம்பாங் மேம்பாலத்தைப் (Jejantas) பழுதுபார்க்கும் பணிகளை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) உடனடியாக மேற்கொள்ளவுள்ளது. இப்பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்குள்ள மேம்பாலம் பழுதடைந்துள்ளது குறித்த புகாரைப் பெற்றவுடன், அதன் உண்மையான நிலையை மதிப்பிடுவதற்காகத் தங்களின் பொறியியல் துறை சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதாக எம்பிஏஜே தெரிவித்தது. மேம்பாலத்தின் சேதமடைந்த கூரை மற்றும் தரைப்பகுதியைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பழுதுபார்ப்புப் பணிகள் 2026 ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு கிட்டத்தட்ட 50,000 ரிங்கிட் ஆகும்.
அதே வேளையில், பொது வசதிகளைப் பொதுமக்கள் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் தேவையற்ற சேதங்கள், கூடுதல் செலவுகள் மற்றும் பழுதுபார்ப்பதற்கான கால தாமதத்தைத் தவிர்க்கலாம் என எம்பிஏஜே நினைவூட்டியுள்ளது.
எம்பிஏஜே வாட்ஸ்அப் புகார் எண் 019-266 8100, அவசர உதவி எண் 03-4296 8100 அல்லது எம்பிஏஜே பொதுப் புகார் மேலாண்மை அமைப்பின் (SPAB) https://mpaj.spab.gov.my இணையத்தளம் மூலம் பொதுமக்கள் புகார்களைச் சமர்ப்பிக்கலாம்.







