கோலாலம்பூர், ஜூலை 24 — நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த சுனோஷினி தனபாலன் (Sunoshini Dhanabalan) நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 'மிஸ் கிராண்ட் மலேசியா 2026' (Miss Grand Malaysia 2026) அழகிப் பட்டத்தைச் சூடினார்.
இந்த வெற்றியின் மூலம் 29 வயது தொழில்முனைவோரான இவர், எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2026' உலக அழகிப் போட்டியில் மலேசியாவின் சார்பில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைப் சேர்ந்த வியான் த்ரிஸ்னி (22) இரண்டாம் இடத்தையும், சரவாக்கைச் சேர்ந்த கிரேஸ்லின் டிகேங் (23) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று சுனோஷினி தெரிவித்துள்ளார்.
“இந்த மகுடத்திற்குப் பின்னால் பல சவால்களும் தியாகங்களும் உள்ளன. இந்த வெற்றி வெறும் மகுடம் அல்லது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல; உலக மேடையில் மலேசியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே எனது இலக்கு” என்று அவர் கூறினார்.







