ஷா ஆலாம், ஜூலை 24 — கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 51A-வில் உள்ள 'மேடான் செலெரா 223' (Medan Selera 223) உணவக மையத்தின் 54 வியாபாரிகளுக்கு ஒரு மாத வாடகை விலக்கு அளிக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
மேலும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாதக் காலத்திற்கு வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடியை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த வாடகை விலக்கு அளிக்கப்படுவதாகவும், தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சியே மேற்கொண்டுள்ளதாகவும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்யும் கனமழையின் போது நீர்மட்டத்தைக் கண்காணிக்க மேடான் செலெரா 223 சுற்றியுள்ள வடிகால்களில் கண்காணிப்பு கருவிகளை (detectors) மாநகராட்சி பொருத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மற்றும் மே மாத திடீர் வெள்ளச் சம்பவங்களைத் தொடர்ந்து, மேடான் செலெரா 223 பகுதி கடந்த வாரம் மூன்றாவது முறையாகத் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.







