ஷா ஆலாம், ஜூலை 19: பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 முதியவர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறவுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் இலவசமாக இன்ஃப்ளூயன்சா (Influenza) காய்ச்சல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சிறப்புத் தடுப்பூசித் திட்டம், பிரிவு 17-இல் உள்ள எஸ்கே ஸ்ரீ டாமாய் (SK Sri Damai) பள்ளியின் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் என்று புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு பதிவு செய்துள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 10.30 மணிக்கு முன்பாகவே குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளப்பட்டது.
காலை 10.30 மணிக்கு உரிமை கோரப்படாத தடுப்பூசி இடங்கள், நேரடியாக வரும் (Walk-in) பிற தகுதியுடைய பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
இந்தத் தடுப்பூசியைப் பெற விரும்பும் முதியவர்கள் அதற்கான பிரத்தியேகக் கூகுள் படிவ இணையப் பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இன்ஃப்ளூயன்சா தடுப்பூசித் திட்டத்துடன் கூடுதலாக, பொதுமக்களுக்கான இலவச அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகளும் அந்த மண்டபத்தில் வழங்கப்படவுள்ளன. இதற்கு முன்கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.







