கோலாலம்பூர் மாநகராட்சி வர்த்தகர்களுக்கு 50 சதவீத வாடகைத் தள்ளுபடி: அமைச்சர் ஹன்னா இயோ

12 ஏப்ரல் 2026, 5:02 AM
கோலாலம்பூர் மாநகராட்சி வர்த்தகர்களுக்கு 50 சதவீத வாடகைத் தள்ளுபடி: அமைச்சர் ஹன்னா இயோ

புத்ராஜெயா, ஏப்ரல் 12: கோலாலம்பூர் மாநகராட்சியின் (DBKL) கீழ் இயங்கி வரும் சுமார் 10,000 சிறு வர்த்தகர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 50 சதவீத வாடகைத் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ அறிவித்துள்ளார்.

குறிப்பாக, நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வால் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'புத்ராஜெயா ஆக்டிஃப்' (Putrajaya Actif) எனும் ஆரோக்கிய விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வாடகைத் தள்ளுபடி சலுகையை அறிவித்த உள்ளூர் அதிகார அமைப்புகளில் கோலாலம்பூர் மாநகராட்சியும் லபுவான் கார்ப்பரேஷனும் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

மாநகராட்சியின் கீழ் உள்ள உணவுக்கூடங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் இதர சிறு வர்த்தகத் தளங்களில் தொழில் புரியும் 10,000 வர்த்தகர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும், இந்தச் சலுகை எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஹன்னா இயோ, புத்ராஜெயா கார்ப்பரேஷன் நிர்வாகமும் இத்தகைய சலுகைகளைத் தனது வர்த்தகர்களுக்கு வழங்குவது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, நேரடி மானியங்களை விட வாடகைத் தள்ளுபடி போன்ற ஆக்கப்பூர்வமான உதவிகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார்.

வாடகைக் குறைப்பால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, மாற்று வருவாய் ஆதாரங்களைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ள போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.