வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் கைது

24 ஜூலை 2026, 1:17 AM
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 24 — சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 'வினோத் கேங்' (Vinod Gang) எனும் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்களை மலேசிய அரசு காவல் துறை (PDRM) கைது செய்து, அந்த கும்பலின் நடவடிக்கைகளை முடக்கியுள்ளது.

மேலும் 5 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட 'ஓப்ஸ் ராபிடோ' (Ops Rapido) நடவடிக்கையின் போது, 21 முதல் 34 வயதுக்குட்பட்ட 11 மலேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ குமார் முத்துவேலு தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கி வந்த இந்தக் கும்பல், 30 வயதுள்ள உள்ளூர் ஆண் ஒருவரால் வழிநடத்தப்பட்டு வந்ததாகவும், மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கும்பலில் உள்ள அனைவரும் தொடர் குற்றவாளிகள் என்றும் அவர் கூறினார்.

“தலைமறைவாக உள்ள எஞ்சிய 5 உறுப்பினர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்; அவர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இந்த கைது நடவடிக்கைகளின் மூலம் சிலாங்கூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்து வந்த சிண்டிகேட்டை முடக்கியுள்ளதோடு, 21 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் தற்போது 2012-ஆம் ஆண்டு (SOSMA) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 9.30 மணிக்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட உள்ளனர். இந்தக் கும்பல் வீடுகளை இலக்காகக் கொண்டு கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

மேலும், கொள்ளை, கொலை முயற்சி, கலவரம் செய்தல், ஆயுதங்களால் காயம் விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு வன்முறைக் குற்றங்களுடனும் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உள்ளது.

கைதான அனைவர் மீதும் வீடு புகுந்து திருடுதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பின்னணிகள் இருப்பதாக டத்தோ குமார் முத்துவேலு மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.