ஷா ஆலாம், ஜூலை - 23 : சிலாங்கூர், குவாலா லாஙாட்டில் ( Kuala Langat ) உள்ள பன்றி வளர்ப்புப் பண்ணை முற்றிலும் காலி செய்யப்படும்.
தற்போது அப்பண்ணையில் உள்ள 12,000 பன்றி குட்டிகள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியப் பின்னர் அவை அழிக்கப்படும். அதன் பின்னர், அப்பண்ணையைக் காலி செய்யும் நடவடிக்கைகள் முழுமைப் பெறுமென விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் இசாம் ஹாஷிம் தெரிவித்தார்.

அப்பண்ணையைக் காலி செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக, அங்கு ஏறக்குறைய 2 லட்சத்து 40,000 பன்றிகள் இருந்தன.
தற்போது அங்கு 12,000 பன்றிகள் மட்டுமே இருப்பதாக கால்நடை சேவைத் துறையின் கணக்கறிக்கை காண்பிக்கிறது.
அப்பண்ணையைக் காலி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அடுத்து, அப்பண்ணை அருகிலிருக்கும் நிலமும் கடற்கரைப் பகுதியும் தூய்மை விவகாரத்தில் மேம்பாடு கண்டிருப்பதாக அவர் கூறினார்.
தற்போது மாநில அரசு அப்பகுதியை மேம்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
அதோடு அப்பண்ணை மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எத்தகைய உதவிகளை செய்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக இசாம் ஹாஷிம் தெரிவித்தார்.







