ஷா ஆலாம், ஜூலை 23 — சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 11 தீவிரப் பகுதிகள் (hotspots) தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
27-ஆவது நோயியல் வாரம் வரை மொத்தம் 2,533 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகச் சுபாங் ஜெயா மேயர் டத்தோ அமிருல் அஜிசான் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 2,024 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 25.15 விழுக்காடு உயர்வாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் தொடர்புடைய பிற முகமைகளுடன் இணைந்து சுபாங் ஜெயா மாநகராட்சியின் சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டிங்கியை ஒழிக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய மேயர், பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.






