கோத்தா கினபாலு, ஜூன் 14 — கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வரையிலான 23ஆவது தொற்றுநோயியல் வாரத்தில், நாடு தழுவிய அளவில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு 20.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 27,640 ஆக இருந்த டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, தற்போது 33,367 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து மங்கத்தால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட், குறிப்பாக சபா மாநிலத்தின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறினார்.
சபா மாநிலத்தில் மட்டும் டிங்கி பாதிப்பு 50.4 விழுக்காடு என்ற அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. அங்கு கடந்தாண்டு 1,905 ஆக இருந்த பாதிப்பு, தற்போது 2,866 ஆக அதிகரித்துள்ளது. கோத்தா கினபாலு, கோத்தா மருது, தாவாவ், சண்டாக்கான், பெனாம்பாங் மற்றும் புத்தாத்தான் ஆகிய மாவட்டங்களே சபா மாநிலத்தின் இந்த அதிகப்படியான பாதிப்புக்கு முக்கியக் காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சுழற்சி முறையிலான தொற்று பாதிப்பு அலையின் கீழ் தான் இந்த தற்போதைய உயர்வும் வருகிறது என்பதை நாம் அறிவோம். எனினும் இந்தச் சூழலைக் கையாள்வதில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
முன்னதாக, தேசிய அளவிலான ஆசியான் டிங்கி தினம், உலக மலேரியா தினம் மற்றும் மெகா கொத்தோங்-ரோயோங் ஆகிய நிகழ்வுகளை டாக்டர் சுல்கிஃப்லி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மேலும், இந்த பாதிப்பு உயர்வுக்குப் பின்னணியில் இருக்கும் காரணிகளைப் பற்றி விளக்கிய அவர், வழக்கமான சுழற்சி முறையைத் தவிர, டிங்கி வைரஸின் துணை மாறுபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும் ஒரு முக்கியக் காரணம் என்றார். தற்போது ‘டென்-3’ (DEN-3) என்ற டிங்கி வைரஸ் துணை மாறுபாடு தீவிரமாகப் பரவி வருவதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
இந்த சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு, 'டிங்கி இல்லா சமூகம்' (கொம்பாட் - Kombat) திட்டத்தின் மூலம் மனித நடத்தை சார்ந்த நுண்ணறிவு (Behavioural Insights) அடிப்படையிலான புதிய அணுகுமுறையை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் பெற்றிருந்தாலும், அது மட்டுமே எப்போதும் செயலாக மாறுவதில்லை என்பதால், நேர்மறையான மாற்றத்தை நோக்கி மக்களைத் தூண்டும் வகையில் இந்த 'நடத்தை மாற்ற உத்தி' வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், இதற்கு கூட்டரசு மற்றும் மாநில அரசுகளின் முழு ஆதரவு தேவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தலையீடுகள், சமூக அதிகாரமளித்தல் மற்றும் பூச்சியியல் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாய அணுகுமுறை ஆகிய மூன்று முக்கிய உத்திகளில் இந்த 'கொம்பாட்' திட்டம் கவனம் செலுத்துகிறது.







