புத்ராஜெயா, ஜூலை 23 — மலேசியர்கள் தங்கள் அடையாள அட்டையில் (MyKad) உள்ள முகவரியைப் புதுப்பிக்கவோ அல்லது மாற்றவோ கட்டாயப்படுத்தும் வகையில் தேசியப் பதிவுத் துறை (JPN) எந்தவொரு சிறப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை.
அதேபோல், மைக்காதில் முகவரியைப் புதுப்பிக்காத மலேசியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக எந்தவொரு சிறப்பு நடவடிக்கைகளும் நடத்தப்படவில்லை என்றும் தேசியப் பதிவுத் துறை தனது சமூக ஊடகப் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
மைக்காதில் உள்ள தகவல்கள் எப்போதும் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டும் இருப்பதை உறுதிசெய்வது ஒவ்வொரு மைக்காட் உரிமையாளரின் பொறுப்பாகும். ஒருவர் புதிய நிரந்தர முகவரிக்கு மாறினால், அந்தத் தகவலைப் புதுப்பிப்பதற்குத் தேசியப் பதிவுத் துறை அலுவலகத்திற்கு நேரில் செல்லுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மைக்காட்டை மாற்றுவதற்கான கட்டணம் 10 ரிங்கிட் ஆகும். 1990-ஆம் ஆண்டின் தேசியப் பதிவு விதிகளின் விதி 15 என்பது ஏற்கனவே நீண்டகாலமாக அமலில் உள்ள ஒன்றுதான்.
அரசாங்கம் அனைத்து மக்களையும் மைக்காட்டை மாற்றக் கட்டாயப்படுத்துகிறது அல்லது இதன் மூலம் இலாபம் ஈட்ட முயல்கிறது என பரப்பப்படும் போலிச் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதோடு அவற்றைப் பகிர வேண்டாம் என்றும் தேசியப் பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய கூற்றுகள் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு, பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
பொதுமக்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும், முழுமையற்ற அல்லது சூழலுக்குப் புறம்பான பதிவுகளின் அடிப்படையில் சொந்தமாக விளக்கம் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குடியிருப்பு மாறிய பிறகு முகவரியைப் புதுப்பிக்கத் தவறினால், 20,000 ரிங்கிட் வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனச் சமூக ஊடகங்களில் செய்திகள் தீயாகப் பரவின.
1990-ஆம் ஆண்டின் தேசியப் பதிவு விதிகளின் விதி 15-இன் படி, ஒருவர் தனது இருப்பிடத்தை மாற்றி 90 நாட்கள் அல்லது அதற்கு மேல் வசித்தால், அவர் தனது அடையாள அட்டையில் முகவரி மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.







