15 ஆண்டு காலப் போராட்டம் ஓய்ந்தது: 3 பிள்ளைகளுக்கும் அடையாள அட்டையை பெற்றார் தனித்து வாழும் தந்தை

21 ஜூன் 2026, 1:00 AM
15 ஆண்டு காலப் போராட்டம் ஓய்ந்தது: 3 பிள்ளைகளுக்கும் அடையாள அட்டையை பெற்றார் தனித்து வாழும் தந்தை

ஷா ஆலாம், ஜூன் 20 - தனது மூன்று பிள்ளைகளும் மலேசியர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தந்தை ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக எதிர்கொண்ட நீண்ட கால காத்திருப்பு, சிலாங்கூர் மாநில அரசின் 'மைசெல்' (MySel) திட்டத்தின் மூலம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இத்திட்டத்தின் துணையோடு அவரது பிள்ளைகள் மூவருக்கும் அடையாள அட்டை கிடைத்துள்ளன.

முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் பல ஆண்டுகளாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த தனது பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு இறுதியாக ஒப்புதல் கிடைத்துள்ளது குறித்து 45 வயதான சுதேசன் பிள்ளை நன்றியுடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

தனது திருமணம் முறையாகப் பதிவு செய்யப்படாததே, பிள்ளைகளின் குடியுரிமை தகுதி முழுமையாகக் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

'நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாரய்டு விரமன்னிடமிருந்து தனது பிள்ளைகளின் அடையாள ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு பிள்ளைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் கல்விக்கான செலவுகள், பாடநூல்கள் வாங்குவது உட்பட இதர பள்ளி கட்டணங்களை மற்ற மாணவர்களைக் காட்டிலும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

அதோடு, அரசு மருத்துவமனைகளில் மலேசியர்களுக்கு கிடைக்கும் இலவச அல்லது ஊக்குவிப்பு தொகை பெற்ற குறைந்த கட்டணத்திலான மருத்துவ வசதிகளையும் தங்களால் பெற முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தங்களுக்கு இந்த ஒப்புதல் கடிதம் கிடைத்ததாகவும், 15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரத்தை விரைவுபடுத்தி உதவிய சிலாங்கூர் மாநில அரசுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், இந்த அடையாள அட்டை தங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்றும் சுதேசன் பிள்ளை மனநெகிழ்வை வெளிப்படுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.