கோத்தா கினபாலு, ஜூன் 23 – 'பூடி டீசல்' (BUDI Diesel) மானியத் திட்டத்தின் பயனாளர்களை உறுதிப்படுத்த மைக்காட் (MyKad) அடையாள அட்டை பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் ஆண்டுக்கு 1 பில்லியன் லிட்டர் வரையிலான எரிபொருள் கசிவைத் தடுக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நடவடிக்கையின் வழி அரசாங்கத்தின் மானியச் செலவுகள் கணிசமாகக் குறைவதோடு, உள்நாட்டு எரிபொருள் விநியோகமும் சீராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக RON95 பெட்ரோலுக்கு அமல்படுத்தப்பட்டதைப் போல மைக்காட் வழி உறுதிப்படுத்தும் முறை டீசல் துறையில் பரவலாகச் செயல்படுத்தப்படாததால், மானியக் கசிவுகள் அதிகமாக இருந்ததாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் குறிப்பிட்டார்.
தற்போதைய புதிய முறையின் கீழ், மைக்காட் பயன்பாட்டின் மூலம் தகுதியுடைய மலேசியக் குடிமக்கள் மட்டுமே மானிய விலையில் டீசலைப் பெற முடியும் என்றும், அந்நிய நாட்டினர் சந்தை விலையிலேயே டீசலை வாங்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம் மானியக் கசிவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, தவறான நபர்களுக்கு மானியம் சென்றடைவது தடுக்கப்படுவதோடு நாட்டின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நீடிப்பது உறுதி செய்யப்படும்.
இத்திட்டத்திற்கான பதிவு குறித்து விளக்கிய அவர், அடிப்படை மானியத்தைப் பெறுவதற்குத் தகுதியுடைய பயனாளர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், அரசாங்கத்தின் தற்போதைய தரவுத்தளங்களின் (Database) வாயிலாகவே அவர்களின் தகுதி தானியங்கி முறையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவித்தார்.
எனினும், 'பூடி டீசல்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 100 லிட்டர் கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற விரும்பும் தனிநபர்கள், அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையத்தளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது உள்நாட்டு வருமான வரி வாரிய (LHDN) அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.







