கைப்பேசியில் உள்ள மைக்காட் (MyKad) புகைப்படங்களை நம்பி வேலை வழங்க வேண்டாம்: முதலாளிமார்களுக்கு எச்சரிக்கை

25 ஜூன் 2026, 2:32 AM
கைப்பேசியில் உள்ள மைக்காட் (MyKad) புகைப்படங்களை நம்பி வேலை வழங்க வேண்டாம்: முதலாளிமார்களுக்கு எச்சரிக்கை

கிள்ளான், ஜூன் 25: வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் போது கைப்பேசிகளில் காட்டப்படும் மைக்காட் (MyKad) அடையாள அட்டைப் புகைப்படங்களை மட்டுமே நம்பி முதலாளிமார்கள் ஏமாற வேண்டாம் என்று தேசிய பதிவுத்துறை (JPN) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலியான மற்றும் திருத்தப்பட்ட அடையாள அட்டைப் புகைப்படங்களைக் காட்டி வேலைவாய்ப்புகளைப் பெறும் புதிய மோசடி உத்தி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேறொரு நபரின் மைக்காட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி, அதனைத் தங்களின் கைப்பேசியில் சேமித்து வைத்துக் கொண்டு, வேலை நேர்காணலின் போது அதனைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவதே இவர்களின் புதிய செயல்பாட்டு முறை (Modus Operandi) என்று தேசிய பதிவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

"சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரு மைக்காட்டை எடுத்து, அதில் உள்ள புகைப்படத்தை மட்டும் மாற்றிவிட்டு அந்தப் படத்தை தங்களின் கைப்பேசியில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் அதனை முதலாளியிடம் காட்டுகின்றனர்; முதலாளிகளும் உடனடியாக அவர்களைப் பணியாளர்களாகப் பதிவு செய்து கொள்கின்றனர்.

இதில் உண்மையான அசல் மைக்காட் பயன்படுத்தப்படாததால், இவர்களுக்கு வேலை கிடைப்பது மிக எளிதாகிவிடுகிறது. எனவே, முதலாளிமார்கள் தங்களின் பங்கிற்குப் பொறுப்புடன் செயல்பட்டு, ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நபர் தான் அதன் உண்மையான உரிமையாளர் என்பதைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாட்டுப் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டால் அது செல்லுபடியாகும் ஆவணமாக இருக்க வேண்டும், அதுவே மைக்காட் என்றால் அதன் அசல் அட்டையை நேரில் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

புத்ராஜெயா, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் அமலாக்கக் குழுக்களுடன் இணைந்து, குடிநுழைவுத்துறை மற்றும் தொழிலாளர் துறையின் (JTK) உதவியோடு தேசிய பதிவுத்துறை சோதனையை நடத்தியது.

இந்த விசாரணையின் போது, பிடிபட்ட சில சந்தேக நபர்கள் தங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களின் மைக்காட்டை எந்தவொரு கட்டணமுமின்றி இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தியதும், இன்னும் சிலர் போலியான அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக RM350 வரை பணம் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது என்று டத்தோ பத்ருல் ஹிஷாம் கூறினார்.

எந்தவொரு நோக்கத்திற்காக இருந்தாலும், மற்றொரு நபரின் மைக்காட்டைப் பயன்படுத்துவது அல்லது அதனைத் தன்வசம் வைத்திருப்பது 1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிகளின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும் என்று அவர் நினைவூட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.