புத்ராஜெயா, ஜூலை 23 — சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் ஒருங்கிணைப்பில் இயங்கும் MYFutureJobs தளம் வாயிலாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 96,700 வேலைவாய்ப்புகள் தீவிரமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம் 6,68,321 காலியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
செயலில் உள்ள இந்த 96,700 வேலைவாய்ப்புகளில் சுமார் 40 விழுக்காடு உயர் திறன் சார்ந்த வேலைகளாகும். மேலும், 30 விழுக்காட்டிற்கும் அதிகமான வாய்ப்புகள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கானது என்றும், சுமார் 20 விழுக்காடு வேலைகள் மாதத்திற்கு 5,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான சம்பளத்தை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு துறைகளிலும் திறன் நிலைகளிலும் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுவதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வேலை தேடுபவர்கள் விரைவாகப் பணியில் அமர உதவும் வகையில் வேலை பொருத்தம், தொழில் வழிகாட்டுதல் மற்றும் மறுபயிற்சி திட்டங்களை மடாணி அரசாங்கம் பெர்கேசோ மற்றும் MYFutureJobs தளம் வாயிலாக வழங்கி வருகிறது.
டிஜிட்டல் தளங்கள் தவிர்த்து, நாடு தழுவிய அளவில் MYFutureJobs வேலைவாய்ப்பு முகாம்களையும் பெர்கேசோ ஏற்பாடு செய்து வருகிறது. நடப்பாண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 2,989 திட்டங்களில் 86,594 வேலை தேடுபவர்கள் பங்கேற்றனர்.
இதில் 14,029 நபர்கள் வெற்றிகரமாக வேலைவாய்ப்பைப் பெற்ற வேளையில், 15,809 பேர் அடுத்தகட்ட நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய இடத்தில் பணியைத் தொடங்க இடம் பெயர வேண்டிய சூழலில் உள்ள வேலை தேடுபவர்களுக்கு உதவ, 1,000 ரிங்கிட் வரையிலான இடப்பெயர்வு நிதியுதவியையும் அரசாங்கம் வழங்குகிறது.
நாட்டின் வேலைவாய்ப்புச் சூழலை வலுப்படுத்த முதலாளிகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடனான ஒத்துழைப்பை மனிதவள அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற பொதுமக்கள் MYFutureJobs தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.







