பாங்கி, ஆகஸ்ட் 4: இன்னும் வேலைவாய்ப்பு பெறாமல் இருக்கும் தொழிற்கல்வி (TVET) பட்டதாரிகள், 'MYFutureJobs' வலைத்தளம் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் ஆலோசனையை வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புச் சங்கம் (PERKESO) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வலைத்தளம், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதலாளிகளிடமிருந்து ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க இதுவே மிகச் சிறந்த தளமாகவும் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"வேலை தேடுவதில் சிரமம் இருந்தால், மனிதவள அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள MYFutureJobs வலைத்தளம் வாயிலாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்புகள் நிச்சயமாகக் காத்திருக்கின்றன," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிற்துறையின் திறமையான பணியாளர் தேவைகளுக்கு ஏற்ப, TVET பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ற பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர அரசாங்கம் தொடர்ந்து முழுமையான உதவிகளைச் செய்யும் என்றும் ரமணன் உறுதிபடத் தெரிவித்தார்.







