போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வலையில் சிக்கிய மலேசியர்கள்: வெளிநாடுகளில் 180 பேர் கைது!

22 ஜூலை 2026, 9:44 AM
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வலையில் சிக்கிய மலேசியர்கள்: வெளிநாடுகளில் 180 பேர் கைது!

கோலாலம்பூர், ஜூலை 22 - கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு 180 மலேசியர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச போதைப்பொருள் கும்பல்களால் 'போதைப்பொருள் கடத்திகளாக' (Drug Mules) பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

புக்கிட் அம்மான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குனர் டத்தோ ஹுசைன் உமார் கான் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் 84 பேரும், கடந்த ஆண்டில் (2025) 66 பேரும், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் மலேசியர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை சற்று குறைந்து வந்த போதிலும், போதைப்பொருள் கடத்திகளாக மலேசியர்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் இன்னும் கவலையளிக்கும் வகையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலேயே மலேசியர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக சம்பளம் அல்லது ஆடம்பர சலுகை அளிப்பதாகக் கூறி ஆசைகாட்டப்பட்டு, அந்தந்த நாடுகளின் கடுமையான சட்டங்கள் மற்றும் ஆபத்துகளை அறியாமல் பலர் இதில் ஏமாந்து சிக்கிக்கொள்கின்றனர் என அவர் கூறினார்.

மலேசியாவிற்குள் போதைப்பொருள் கடத்திகளாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், கடந்த 2025-ஆம் ஆண்டிலும், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்திலும் தலா 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இன்னமும் விமான நிலையங்களையே தங்களின் முதன்மை வழிகளாகப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகளையும் அவர்கள் மாற்று வழிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க உளவுத் தகவல்களைப் பகிர்வது, கூட்டு நடவடிக்கைகள் எடுப்பது எனப் பிற நாட்டுச் சட்ட அமலாக்க முகமைகளுடன் மலேசியா தீவிரமாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

மலேசியாவில் கைதாகும் போதைப்பொருள் கடத்திகளிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் நெட்வொர்க்குகளை அடையாளம் காண சர்வதேச முகமைகளுக்குத் தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.