கடும் வெயில்: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அமைச்சு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது

25 மார்ச் 2026, 6:38 AM
கடும் வெயில்: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அமைச்சு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது

கோலாலம்பூர், மார்ச் 25 - நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் கல்வி அமைச்சு (KPM) புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதில் குறிப்பாக, வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் போதிய அளவு சுத்தமான குடிநீரைப் பருகுவதை உறுதி செய்வதோடு, அவர்களின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கத் தேவையான வசதிகளைப் பள்ளி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என இன்றைய செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், பள்ளி நிர்வாகமே நேரடியாகத் தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும் என்றும், வெப்பத்தினால் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கிளினிக் அல்லது மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நிலவி வரும் வெப்பச் சூழலுக்கு ஏற்ப, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்ணியமான விளையாட்டு உடைகளை அணிந்து பள்ளிக்கு வரப் பள்ளி நிர்வாகங்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம்.

அந்தந்தப் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, கல்வி அமைச்சு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் நாட்காட்டியின்படி, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தொகுதி 'ஏ' (Kumpulan A) பள்ளிகள் மார்ச் 28-ஆம் தேதி வரையிலும், சிலாங்கூர், கோலாலம்பூர் உள்ளிட்ட இதர மாநிலங்களை உள்ளடக்கிய தொகுதி 'பி' (Kumpulan B) பள்ளிகள் மார்ச் 29-ஆம் தேதி வரையிலும் விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.