ஷா ஆலம், ஜூன் 12: சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்பட்ட போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி, இல்லத்தரசி ஒருவர் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் தொகையை இழந்து ஏமாற்றமடைந்துள்ளார்.
கடந்த மே மாதம் 8-ஆம் தேதி முகநூல் பக்கத்தில் வந்த பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றைக் கண்டு ஈர்க்கப்பட்ட 37 வயதுடைய அந்தப் பெண், அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க் (Link) மூலமாக வாட்ஸ்அப் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அதிக வருமானம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தப் பெண்ணை டெலிகிராம் குரூப் ஒன்றில் இணையச் செய்துள்ளனர். அதில் கொடுக்கப்பட்ட முதல் இரண்டு எளிய பணிகளைச் செய்து முடித்த அந்தப் பெண்ணிற்கு, 85 ரிங்கிட் கமிஷன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வேலை உண்மையானதுதான் என்று முழுமையாக நம்பிய அந்த இல்லத்தரசி, அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட பணிகளைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 8 முதல் மே 18 வரையிலான காலகட்டத்தில், ஏழு வெவ்வேறான வங்கி கணக்குகளுக்குப் படிப்படியாக ஏழு முறை அவர் பணப் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில் கிடைத்த 85 ரிங்கிட்டைத் தவிர, அதன் பிறகு எந்தவொரு கமிஷன் தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை.
இந்த மோசடியில் அவரும் அவரது கணவரும் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த தங்களின் சொந்த சேமிப்புப் பணமான மொத்தம் 95,715 ரிங்கிட்டைப் பறி அப்பெண் கொடுத்துள்ளார்.
இது குறித்துக் கோலா திரங்கானு மாவட்டக் காவல்துறை தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் கூறுகையில், பாதிக்கப்பட்ட அந்த இல்லத்தரசி நேற்று மாலை 6.02 மணியளவில் கோலா திரங்கானு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த மோசடிச் சம்பவம் குறித்துப் குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






