ஷா ஆலம், பிப் 6: கோத்தா திங்கியில் பள்ளி மாணவர்களிடையே கண்டறியப்பட்ட காசநோய் (TB) சம்பவங்கள் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (MOH) தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதுவரை பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என ஜோகூர் கல்வி மற்றும் தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தமின் அறிவித்தார்.
நெருங்கிய தொடர்பில் இருந்த ஆறு மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார். இதில் நான்கு ஆண் மாணவர்களும் இரண்டு பெண் மாணவர்களும் அடங்குவர்.
"பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவும், தகுந்த சிகிச்சை பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இப்போது சுகாதார நடைமுறைகளின்படி நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்," என தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று நிர்வாகம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குக் காசநோய் நோய் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல்களை மாவட்டச் சுகாதார அலுவலகம் (PKD) வழங்கியதாக அவர் கூறினார்.
சரிபார்க்கப்படாதத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அஸ்னான் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். மேலும், அனைத்து பள்ளிகளும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, கோத்தா திங்கியில் பிப்ரவரி 4 நிலவரப்படி 33 பேருக்குக் காசநோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


