ஷா ஆலாம், ஜூலை 20 — சிலாங்கூர் மாநில அரசு இளைஞர் மேம்பாட்டிற்காக மேலும் விரிவான மற்றும் முழுமையான அணுகுமுறையை அமல்படுத்தி வருகிறது.
இளைஞர் கொள்கைகளை பல்வேறு முக்கிய திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்படுவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான மாநில செயற்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, படைப்பாற்றல் துறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய நெகிழ்வான அணுகுமுறையின் மூலம், மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் அனைவரும் இளைஞர் அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொள்வதில்லை என்பதால், சமூகங்கள், விளையாட்டு, மின்னணு விளையாட்டு (e-sports), படைப்பாற்றல் துறை மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியே அவர்களை நேரடியாக சென்றடையும் வகையில் தங்களது அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இளைஞர் மேம்பாட்டை வலுப்படுத்தவும், உயர்தரமிக்க இளம் தலைவர்களை உருவாக்கவும் சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சிலாங்கூர் இளைஞர் மாநாடு, விவாதப் போட்டிகள், சிலாங்கூர் இளைஞர் இயக்கவாதிகள் திட்டம் (PeBS), செர்வ் சிலாங்கூர் (SERVE Selangor), தலைத்துவப் பயிற்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கான ஆதரவு போன்ற திட்டங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
போட்டித்தன்மை, நேர்மை, அனுதாபம் மற்றும் சமுதாயத்தின் மீதான பொறுப்புணர்வு கொண்ட ஓர் இளைய தலைமுறையை உருவாக்கும் நோக்கில், தன்னார்வ திட்டங்கள், தலைத்துவ மேம்பாடு மற்றும் சமூக நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பொருளாதார வளர்ச்சி வளத்தை உருவாக்கக்கூடும், ஆனால் தலைத்துவமும் நற்பண்புகளுமே ஒரு நாட்டை உருவாக்கும் என்பதால் இளைஞர் மேம்பாடு என்பது அனைத்து நிலைகளிலும் முழுமையாக இருக்க வேண்டும் என்று நஜுவான் ஹலிமி வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநிலம் இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புகளையும், வலுவான தொழில்சார் தொடர்புகளையும், தரமான கல்வி நிறுவனங்களையும் வழங்கி வருகிறது.
மாநிலத்தின் துடிப்பான பொருளாதாரமும், திறமை மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான மாநில அரசின் ஆதரவும், இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான சிறந்த இடமாக சிலாங்கூரை மாற்றியுள்ளது.








