ஷா ஆலாம், ஜூலை 20 — கோலாலம்பூர், சிலாங்கூர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களிலும் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது அது வெளியிடப்படும் நேரத்திலிருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கையாகும் என்று வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வ MetMalaysia இணையதளம், myCuaca செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக உடனுக்குடன் சமீபத்திய வானிலை நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






