கோலாலம்பூர்: ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண இறுதியாட்டத்தைக் காண இன்று அதிகாலை ஆயிரக்கணக்கானோர் மெர்டேகா சதுக்கத்தில் (Dataran Merdeka) திரண்டிருந்த வேளை, அவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளின் அளவைக் கண்டு கோலாலம்பூர் மாநகர் மன்றம்(DBKL) வருத்தத்தை வெளிப்படுத்தியது.
ரசிகர்களின் இந்த திரளான கூட்டம் காற்பந்து மீதான பொதுமக்களின் ஆர்வத்தைப் பிரதிபலித்தாலும், கொண்டாட்டத்துக்குப் பிறகு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சதுக்கம் முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடந்தது, வருந்தத்தக்கது என டிபிகேஎல் (DBKL) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
டத்தாரான் மெர்டேகா நாட்டின் பெருமை மற்றும் வரலாற்றின் சின்னமாகும். மக்கள் அந்த இடத்தை விட்டுச் சென்ற விதம் அதை அவர்கள் எந்தளவு மதிக்கின்றார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாக DBKL தெரிவித்தது.
பொதுமக்கள் கொண்டாடுவதற்கும் பொது நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த சுதந்திரம் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதின் கடப்பாட்டினை அலட்சியப் படுத்தி விடக்கூடாது.
"ஒரு சிறந்த நகரம், அது ஈர்க்கும் கூட்டத்தால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை, மாறாக கூட்டம் கலைந்தப் பின்னர் அது இருக்கும் நிலையை வைத்தே மதிப்பிடப்படுகிறது."
எனவே, கோலாலம்பூர் நமது இல்லம். நமது சொந்த வீட்டைப் பேணுவது போல அவ்விடத்தையும் நாம் கவனித்துக் கொள்வோம்," என்று டிபிகேஎல் அதன் பேஸ்பூக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
காற்பந்து ரசிகர்கள் மெர்டேக்கா சதுக்கத்தை குப்பை காடாக்கிச் சென்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, நெட்டிசன்களின் விமர்சனங்களைப் பெற்றதை அடுத்தும், பொதுக் கூட்டங்களில் மக்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் அது தூண்டியதை தொடர்ந்தும் இந்த பேஸ்புக் பதிவு வெளியானது.
அந்தப் பதிவில் கருத்துத் தெரிவித்த பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் மக்களின் நடத்தை மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.









