பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26: கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஜாலான் அலோர் (Jalan Alor) பகுதியில் சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்த 6 உணவகங்களை உடனடியாக மூடுமாறு கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் கூட்டு சோதனையின் போது, அப்பகுதியில் உள்ள மொத்தம் 45 உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
உரிமம் இன்றி இயங்குதல், உணவு கையாளுதல் விதிமுறைகளை மீறுதல் மற்றும் உணவகங்களில் புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 74 நோட்டீஸ்கள் மற்றும் அபராதங்கள் (Compounds) விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த உணவகங்களில் உள்ள சமையலறைகள் மிகவும் அசுத்தமாக இருந்ததும், சமையல் எண்ணெய் கழிவுகளைத் தடுக்கும் 'கிரீஸ் டிராப்' (Grease traps) வசதிகள் இல்லாமலும் அல்லது பழுதடைந்த நிலையில் இருந்ததும் சோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும், சமையலறைகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகளின் நடமாட்டம் இருந்ததோடு, உணவுகள் முறையற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததும் அம்பலமானது.
அதோடு, அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் பலர் டைபாய்டு (Typhoid) தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலும், உணவு கையாளுபவர்களுக்கான முறையான பயிற்சியைப் பெறாமலும் வேலை செய்ததுடன், உணவகங்களுக்குள் விதிக்கப்பட்டிருந்த புகைபிடித்தல் தடையை மீறிய குற்றங்களுக்காகவும் அந்த 6 உணவகங்கள் மீது இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







