கோலாலம்பூர் மாநகராட்சியின் புதிய மின்-உரிம முறை அறிமுகம்

20 மே 2026, 9:35 AM
கோலாலம்பூர் மாநகராட்சியின் புதிய மின்-உரிம முறை அறிமுகம்

கோலாலம்பூர், மே 20 - கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL), வர்த்தக உரிமங்களை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் தனது 'இ-லைசென்ஸ்' (e-License) எனும் மின்-உரிம முறையை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனி வணிகர்கள் தங்களின் உரிமங்களை இணையம் வழியாக மூன்று நிமிடங்களில் மிக விரைவாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இந்த மேம்படுத்தப்பட்ட புதிய முறை குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லூன் மாக் உஜுட், இனி உரிமம் வைத்திருப்பவர்கள் இதற்காக மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

விண்ணப்பதாரர்கள் இணையவழிக் கட்டண முறையின் மூலம் தங்களின் கட்டணங்களைச் செலுத்திவிட்டு, உரிமங்களை தாங்களாகவே அச்சிட்டுக் கொள்ளலாம் என அவர் விளக்கமளித்தார். இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர்துறை அமைச்சர் ஹன்னா யோவும் உடனிருந்தார்.

மேலும், கள ஆய்வுகளின் போது கண்காணிப்புப் பணிகளை எளிதாக்குவதற்காகப் 'பார்கோடு' (Barcode) எனப்படும் பட்டைக் குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வணிக வளாகங்களில் சோதனைகள் நடத்தப்படும் போது இந்த பார்கோடு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.

இந்த அதிநவீன முறையானது, தற்போது செயல்பாட்டில் உள்ள உரிமங்களின் எண்ணிக்கை மற்றும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள் போன்ற உரிமத் தரவுகளை உடனுக்குடன் (Real-time) கண்காணிக்க உதவுகிறது.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 42,000 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள வேளையில், 92,263 உரிமங்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

புதிய நடைமுறையின் கீழ், பயனர் தங்களின் கணக்கில் நுழைந்து சில கிளிக்குகளின் மூலமாகவே தங்களின் உரிமங்களை நேரடியாகப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் இந்தத் தளம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், நிலுவைக் கட்டணம் வைத்துள்ள வணிகர்கள், தங்களின் பழைய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே, மூன்று ஆண்டுகளுக்கான உரிமப் புதுப்பித்தலையும் அதற்கான 10 விழுக்காடு தள்ளுபடியையும் பெற தகுதி பெறுவார்கள் என்றும் டத்தோ ஸ்ரீ ஃபட்லூன் மாக் உஜுட் தெளிவுபடுத்தினார்.

இணையம் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக இணையத்தில் விண்ணப்பிக்கத் தெரியாத வணிகர்கள், வழக்கம் போல மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று உதவி பெறலாம் என்றும், அவர்களுக்கும் இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.