கோலாலம்பூர், மே 15 – தலைநகரில் புதிய பேருந்து நிலையங்களை உருவாக்குவதற்கும், தற்போது உள்ள நிலையங்களை மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகராட்சிக்கு (DBKL) மலேசியப் போக்குவரத்து அமைச்சு (MOT) 1.5 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.
இன்று நடைபெற்ற 'செகாம்புட் உத்தாரா' இரயில் நிலையத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், தலைநகரில் முறையான பேருந்து நிலையங்கள் இல்லாதது குறித்துப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நகரவாசிகள் பல நேரங்களில் முறையான நிழற்குடை, தளம் அல்லது பேருந்து நிறுத்தப் பலகைகள் கூட இல்லாமல் சாலையோரங்களில் நின்று பேருந்துகளில் ஏறும் நிலை உள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்த அவலநிலையை மாற்றிப், பயணிகளுக்குச் சிறந்த வசதியை ஏற்படுத்தித் தரவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் துறை (கூட்டாட்சிப் பிரதேசம்) அமைச்சர் ஹன்னா இயோ, போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பேருந்து நிலையங்களை அமைக்க அல்லது புதுப்பிக்க 15,000 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாகச் சுமார் 100 பேருந்து நிலையங்கள் இதன் மூலம் மேம்படுத்தப்படவுள்ளன.
இதேபோன்ற திட்டம் முன்னதாக பினாங்கு மாநிலத்தில் உள்ளூர் நகராட்சியுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. பினாங்கில் இத்திட்டம் முழுமையடைய 6 மாதங்கள் ஆன நிலையில், கோலாலம்பூர் மாநகராட்சி இதனை இன்னும் வேகமாக 3 மாதங்களுக்குள் முடிக்கும் என நம்புவதாக அமைச்சர் லோக் குறிப்பிட்டார்.
அதே வேளையில், தலைநகர் மக்களுக்குத் தொடர்ந்து இலவச 'கோகேஎல்' (GoKL) பேருந்து சேவையை வழங்கி வரும் கோலாலம்பூர் மாநகராட்சிக்கு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த கோகேஎல் சேவையில் தற்போது மின்சாரப் பேருந்துகளும் (Electric Buses) இணைக்கப்பட்டுப் பொதுமக்களின் பயண அனுபவம் மேம்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








