ஷா அலாம், நவம்பர் 2 — மாநிலத்தில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகம் பதிவான நான்கு மாவட்டங்களில் மொத்தம் 12,500 மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த முயற்சி, மொத்தம் RM1 மில்லியன் நிதியுடன் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் நோக்கம் குறைந்த வருமானம் பெரும் B40 குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் இன்ஃப்ளூயன்சா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுடன், அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதாகும்.
சிலாங்கூர் சுகாதாரத் துறை எட்டு வயதுக்கும் குறைந்த மாணவர்கள், முன்பு தடுப்பூசி எடுத்திருக்காவிட்டால், இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை இரண்டு முறை பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இந்தத் திட்டம் இரண்டு வழிகளில் செயல்படுத்தப்படும். அதாவது, ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டம் (PPKI) கொண்ட பள்ளிகளில் நடமாடும் திட்டமாகவும், அல்லது Selcare கிளினிக் மற்றும் இணைப்பு கிளினிக்குகளில் (panel clinics) walk-in முறையிலும். பெற்றோர் SeLangkah செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
PPKI கொண்ட பள்ளிகளில் உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4,720 எட்டு வயதிற்குக் குறைந்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக சிறப்பு குழுக்கள் அனுப்பப்படவுள்ளன. மேலும், PPKI பள்ளிகளில் படிக்காத ஆனால் B40 குடும்பங்களைச் சேர்ந்த, இணை நோய்கள் அல்லது நீடித்த நோய்களைக் கொண்டுள்ள குழந்தைகள் நேரடியாக Selcare கிளினிக் அல்லது இணைப்பு கிளினிக்குகளில் தடுப்பூசி பெறலாம்.




