ஷா ஆலம், ஜூன் 11: சமுதாயத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப், புக்கிட் காசிங் (Bukit Gasing) வட்டாரத்தைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மொத்தம் 200 இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சென் மோ தேசிய வகை சீனப் பள்ளியில் (SJKC Chen Moh) நடைபெற்ற இந்த சுகாதாரத் திட்டத்திற்குப் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததாகப் புக்கிட் காசிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆர். இராஜீவ் தெரிவித்துள்ளார்.
மக்களின் இந்தப் பங்கேற்பு, நோய்த் தடுப்பு முறைகள் குறித்து சமுதாயத்தில் நிலவி வரும் விழிப்புணர்வை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அசுந்தா மருத்துவமனையின் (Hospital Assunta) ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இத்திட்டத்தில், தடுப்பூசி மட்டுமின்றி வருகை தந்த பொதுமக்களுக்கு இலவச உடல்நலப் பரிசோதனை சேவைகளும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இது குறித்துத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஆர். இராஜீவ், இத்தகைய திட்டங்கள் பொதுமக்கள் தங்களின் ஆரோக்கிய நிலையைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வதற்கும், நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதன் அவசியத்தை உணர்த்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கையைப் பேணுவதற்கு நோய்த் தடுப்பும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது என்றும் அவர் விவரித்தார்.
மேலும், இந்த ஆரோக்கிய விழிப்புணர்வுத் திட்டம் வெறும் பரிசோதனையோடு நின்றுவிடாமல், வருங்காலத்தில் ஆரோக்கியமான, வலிமையான மற்றும் எதையும் தாங்கக்கூடிய ஒரு துடிப்பான சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர். இராஜீவ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.







