ஷா ஆலம், 18 நவம்பர் — கடந்த வாரம் தொடங்கி முதல் கட்ட இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கல் எட்டு வயதிற்குக் குறைந்த 8,000 குழந்தைகளுக்கு, குறிப்பாக சிறப்பு கல்விப் பள்ளி மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
அதிக ஆபத்து உள்ள மாணவர்களுக்கு, பெற்றோர் சம்மதம் பெற்ற பின், இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மாநிலப் பொது சுகாதாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
முதல் கட்டத்திற்காக 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 20,000 தடுப்பூசி அளவு வரை உள்ளடக்கியது. எட்டு வயதிற்குக் குறைந்த சுமார் 8,000 குழந்தைகள் இரண்டு அளவு தடுப்பூசி பெற்றுள்ளனர். மாநில அரசு ஒதுக்கப்படும் நிதி பயனான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறது. அதனால் முதலில் அதிக ஆபத்து உள்ள குழந்தைகளில் தொடங்கி, பின்னர் பிற குழுக்களுக்கும் விரிவாக்கப்படும்,” என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டசபைக் கூட்டத்தில் பதிலளித்தார்.
அக்டோபர் 25ஆம் தேதி வரை 268 தொற்றுக் குழுக்களில் இருந்து 3,239 இன்ஃப்ளூயன்சா நோய் நிலைகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலானவை கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டவை, மறறவை தனியார் வீடுகளில் கண்டறியப்பட்டவை என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், இந்த இலவச தடுப்பூசிவழங்கல் இரு முறைகளில் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கினார்.




