மிரி, ஜூலை 19: சமூக ஊடகங்கள் வழி நகை வாங்கியபோது இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் போல் நடித்து நபர் ஒருவர் ஏமாற்றியதில், 27 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் RM622,792.65 பணத்தை இழந்துள்ளார்.
கடந்த ஜூலை 18 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாகப் புகார் பெறப்பட்டதாக மிரி மாவட்டக் காவல்துறை தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர், இப்பெண் முன்பு இணையம் வழி நகை வாங்கியபோது ஏமாற்றப்பட்டு இழந்த பணத்தை சட்டப்பூர்வமாக மீட்டுத் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
ஆனால், அந்தச் சட்ட உதவிச் சேவைக்கான கட்டணம் என்ற பெயரில், கடந்த ஜூன் 23, 2026 முதல் ஜூலை 18, 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 12 பரிவர்த்தனைகள் மூலம் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) எனப்படும் மெய்நிகர் நாணயமாகப் பணத்தைச் செலுத்துமாறு அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.
இதனை நம்பி அந்தப் பெண் அனுப்பிய ஒட்டுமொத்தப் பணத்தின் மதிப்பு RM622,792.65 என மதிப்பிடப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்நபரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி எண் முடக்கப்பட்டு (Blocked) இருந்ததைக் கண்ட பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மிரி மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (BSJKD) தற்போது மோசடி குற்றத்திற்கான தண்டனைச் சட்டப் பிரிவு 420-இன் கீழ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.







