கோலாலம்பூர், ஜூன் 29: புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் 94 அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மலேசிய சர்வதேச கடப்பிதழின் புதிய பதிப்பை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
உலகின் மிக சக்திவாய்ந்த பயண ஆவணங்களில் ஒன்றாகத் திகழும் மலேசியக் கடப்பிதழின் தரத்தையும், நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆவணம் அறிமுகம் அமைகிறது.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள கடப்பிதழில் 49 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள வேளையில், நாளை அறிமுகமாகவிருக்கும் புதிய பதிப்பில் பாதுகாப்பு அம்சங்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மேம்பாடுகளில் பல விசேஷ தடயவியல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச 'பாஸ்போர்ட் இண்டெக்ஸ்' (Passport Index) தரவரிசையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் மலேசிய சர்வதேச கடப்பிதழ் உலகின் மூன்றாவது மிக சக்திவாய்ந்த கடப்பிதழாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





