புதிய மலேசியக் கடப்பிதழ் கட்டண விவரங்களை குடிநுழைவுத் துறை வெளியிட்டது

4 ஜூன் 2026, 9:10 AM
புதிய மலேசியக் கடப்பிதழ் கட்டண விவரங்களை குடிநுழைவுத் துறை வெளியிட்டது

ஷா ஆலம், ஜூன் 4 – அரசாங்கத்தால் வர்த்தமானி செய்யப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டு கட்டணங்கள் (கடப்பிதழ் மற்றும் விசா) திருத்த உத்தரவைத் தொடர்ந்து, மலேசியக் குடிமக்கள் இனி 350 ரிங்கிட் கட்டணத்தில் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழைப் பெற முடியும்.

இந்த புதிய கட்டணம் மற்றும் 10 ஆண்டுகள் ஆயுள் கொண்ட கடப்பிதழ் விநியோகிக்கப்படும் அதிகாரப்பூர்வ தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு இந்த விபரங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது நடைமுறைக்கு வரும் நாள் விரைவில் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த அரசாங்க வர்த்தமானியின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த 10 ஆண்டு கடப்பிதழ் பெற 175 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக விதிக்கப்படும்.

அதே வேளையில், 2008-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் (OKU) இந்த கடப்பிதழை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றுடன், கடப்பிதழ் தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் அதனை மாற்றுவதற்கான கட்டண விகிதங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்கள் தங்களின் கடப்பிதழ் முதல் முறையாகத் தொலைத்துவிட்டு புதிய கடப்பிதழ் பெறும்போது முந்தைய 400 ரிங்கிட்டிற்குப் பதிலாக இனி 550 ரிங்கிட் செலுத்த வேண்டும். அதே நபர் இரண்டாவது முறை தொலைத்தால் 850 ரிங்கிட்டும், மூன்றாவது மற்றும் அதற்கு மேற்பட்ட முறைகளுக்கு 1,350 ரிங்கிட்டும் அபராதக் கட்டணமாகச் செலுத்த நேரிடும்.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கடப்பிதழைத் தொலைக்கும் பட்சத்தில், முதல் முறை மாற்றுவதற்கு 375 ரிங்கிட்டும், இரண்டாவது முறைக்கு 675 ரிங்கிட்டும், அதற்கு அடுத்தடுத்த முறைகளுக்கு 1,175 ரிங்கிட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தங்களின் கடப்பிதழ் முதல் முறை தொலைத்தால் 200 ரிங்கிட்டும், இரண்டாவது முறைக்கு 500 ரிங்கிட்டும், அதற்கு அடுத்தடுத்த முறைகளுக்கு 1,000 ரிங்கிட்டும் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மலேசியர்கள் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழுக்கு 200 ரிங்கிட்டும், மூத்த குடிமக்கள் 100 ரிங்கிட்டும் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.