மலேசியாவின் புதிய சர்வதேசக் கடப்பிதழ் விநியோகம் ஒத்திவைப்பு

26 மே 2026, 6:43 AM
மலேசியாவின் புதிய சர்வதேசக் கடப்பிதழ் விநியோகம் ஒத்திவைப்பு

புத்ராஜெயா, மே 26: எதிர்வரும் ஜூன் 1, திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படவிருந்த புதிய பதிப்பிலான மலேசிய சர்வதேசக் கடப்பிதழ் (PMA) வெளியீடு, மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

புதிய விநியோகத் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகள் எவ்விதத் தடங்கலும் இன்றி சீராக வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மக்கள் கடப்பிதழ் சேவைகளைப் பெறுவதில் சிறந்த அனுபவத்தைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவுத் துறை பொது இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், பொதுமக்கள் தங்களின் கடப்பிதழ்களை வழக்கம்போல் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள மற்றும் இன்னும் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ள பழைய கடப்பிதழ்கள் அனைத்தும், அவை காலாவதியாகும் தேதி வரை தொடர்ந்து பயன்படுத்தத்தக்கவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய மலேசிய சர்வதேச பாஸ்போர்ட் அமலாக்கம் குறித்த அடுத்தகட்ட முன்னேற்றங்கள், மலேசியக் குடிவரவுத் துறையின் அதிகாரப்பூர்வ ஊடகக் கணக்குகள் மற்றும் தளங்களின் வாயிலாக அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டத்தோ சகாரியா ஷாபான், நாட்டின் பயண ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதிலும் தங்களது துறை எப்போதும் உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, நாட்டின் அடையாள ஆவணத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், சுமார் 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய பதிப்பிலான மலேசிய சர்வதேச கடப்பிதழ் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.