மிரி, ஜூலை 16 : சமூக ஊடகத்தில் ஆன்லைன் கேக் விற்பனை விளம்பர இணைப்பை(Link) கிளிக் செய்த 43 வயது பெண் தொழிலதிபர் 13 லட்சத்து 89,000 ரிங்கிட் பணத்தை இழந்தார்.
சரவாக் மிரியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் நேற்று போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், சமூக ஊடகத்தில் கேக் விற்பனை விளம்பரத்தைப் பார்த்ததாகவும், ஆர்டர் செய்வதற்கும் மெனுவை (Menu) பார்ப்பதற்கும் அங்கிருந்த லிங்கைக் கிளிக் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அந்த லிங்கைக் கிளிக் செய்தவுடன், அவரது மொபைல் போன் திரை திடீரென கறுப்பாக மாறி, முற்றிலும் வேலை செய்வதை நிறுத்தியுள்ளது.
அதே நாள் காலை 10 மணியளவில், அவர் தனது வங்கி கணக்குகளைச் சரிபார்த்துள்ளார். அப்போது, அவரது நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு வங்கி கணக்குகளில் இருந்து, அவருக்குத் தெரியாமல் 13 லட்சத்து 89 ஆயிரத்து 132 ரிங்கிட் பணம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஜூலை 14- ஆம் தேதி, மொத்தம் 19 பரிவர்த்தனைகள் (Transactions) மூலம் அந்தத் தொகை 15 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா (ACP Mohd Farhan Lee Abdullah) அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.







