ஆயர் கெரோவில் போலி முதலீட்டு மோசடி கும்பலின் மையம் முற்றுகை; சீன நாட்டைச் சேர்ந்த 21 ஆண்கள் கைது!

15 ஜூலை 2026, 8:46 AM
ஆயர் கெரோவில் போலி முதலீட்டு மோசடி கும்பலின் மையம் முற்றுகை; சீன நாட்டைச் சேர்ந்த 21 ஆண்கள் கைது!

மலாக்கா, ஜூலை 15: ஆயர் கெரோ (Ayer Keroh) பகுதியில் போலி முதலீட்டுத் திட்டத்தை நடத்தி வந்த கும்பலின் செயல்பாட்டு மையத்தை அதிரடியாகச் சோதனையிட்ட காவல்துறையினர், சீன நாட்டைச் சேர்ந்த 21 ஆண்களைக் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில், மலாக்கா தெங்கா மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை குழுவினர் அங்குள்ள இரண்டு மாடி பங்களா வீடு ஒன்றை முற்றுகையிட்டு இந்தச் சோதனையை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட 21 சீன நாட்டு ஆண்கள் 23 முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும் மலாக்கா தெங்கா மாவட்ட தற்காலிக காவல் துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், மலேசியாவிற்குள் நுழைவதற்கான முறையான பயண ஆவணங்கள் எதையும் வைத்திருக்காத அந்தச் சந்தேக நபர்கள், தங்களுக்கு இந்த மையத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக வேலை வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, இணையம் வழியாகப் போலியான முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றுவதே இக்கும்பலின் செயல்பாட்டு முறையாகும். இதில் ஆர்வம் காட்டும் பாதிக்கப்பட்ட நபர்கள், 'QLCH.CC' என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு பணிக்கப்படுவார்கள். அங்கு முதலீடு தொடர்பான போலித் தகவல்கள் காண்பிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, அதே கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொண்டு, அவர்கள் பணப் பரிமாற்றம் செய்யும் வரை தொடர்ந்து ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து 25,000 ரிங்கிட் மதிப்புள்ள 8 கணினிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், 14 ஐபோன் ரக அலைபேசிகள் மற்றும் ஒரு யூஎஸ்பி அடாப்டர் (USB adapter) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தண்டனைச் சட்டம் செக்ஷன் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 1959/63 குடிநுழைவுச் சட்டம் செக்ஷன் 6(1)(C) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவ தற்போது 14 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.