வாஷிங்டன், ஜூலை 15 - ஈரான், பேச்சு வார்த்தைக்கு திரும்பாவிடில், அடுத்த வாரம் அந்நாட்டின் எரிசக்தி ஆலைகள், பாலங்கள் ஆகியவை குண்டு வீசி தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்திருக்கின்றார்.
தொடர்ச்சியாக நான்காவது நாளாக அவ்விரு நாடுகளும் பதில் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஃபொக்ஸ் நியுஸ்-சுக்கு (Fox News) வழங்கிய நேர்காணலில் இந்த புதிய மருட்டலை விடுத்திருக்கின்றார் டிரம்ப்.
முன்னதாக,டிரம்ப் ஹொர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் சரக்கு கப்பல்களுக்கு 20 விழுக்காடு கட்டணம் விதிக்கப்படுமெனும் மருட்டலை மீட்டுக் கொண்டிருந்தார். எனினும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் பாலங்கள், எரிசக்தி ஆலைகள் உட்பட ஈரானின் பொது வசதிகளின் மீது குண்டு வீச்சு தாக்குதலை நடத்தப் போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.
எனினும், பொது மக்களையும், பொது வசதிகளையும் தாக்குவது அனைத்துலக சட்டத்தின் கீழ் போர் குற்றமென ஐநாவுக்கான மனித உரிமை தலைவர் வொல்கர் துர்க் கூறியிருந்தார்.
இவ்வேளையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இந்தப் புதிய தாக்குதலைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.






