இந்தியாவில் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளை நாடு கடத்தியது மலேசியக் காவல்துறை

18 ஜூன் 2026, 2:49 AM
இந்தியாவில் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளை நாடு கடத்தியது மலேசியக் காவல்துறை

கோலாலம்பூர், ஜூன் 18 - இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் நிகழ்ந்த இரயில் தண்டவாளக் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும், இந்தியாவால் தேடப்பட்டு வந்த இரு முக்கியக் குற்றவாளிகளை மலேசிய அரசக் காவல்துறை (PDRM) வெற்றிகரமாகக் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி பட்டியாலா மாவட்டத்தின் முக்கிய இரயில் பாதையை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட வெடிபொருள் (IED) குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்த இரு சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யுமாறு இந்திய அதிகாரிகள் விடுத்த அதிகாரப்பூர்வ வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டு நடவடிக்கை, பிராந்தியப் பாதுகாப்பைப் அச்சுறுத்தும் கடுமையான குற்றங்களை ஒடுக்குவதில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவையும் ஒத்துழைப்பையும் தெளிவாகப் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

எல்லை கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சர்வதேசப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதிலும் மலேசியக் காவல்துறையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி ஓடிவரும் குற்றவாளிகளுக்கு மலேசியா ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்காது என்பதை இந்த அதிரடி நடவடிக்கை உலகிற்கு உணர்த்தியுள்ளதாக டத்தோ எம். குமார் திட்டவட்டமாகக் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக நம்பப்படும் அந்த இரு சந்தேகநபர்களும், காவல் துறையின் கண்ணில் படாமல் இருப்பதற்காகக் கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

எனினும், தீவிரமான உளவுத்துறை விசாரணை மற்றும் சர்வதேசத் தகவல் பரிமாற்றத்தின் மூலம், புக்கிட் அமான் தேசிய மத்தியப் பணியகம்/இன்டர்போல் பிரிவு (D12) தலைநகரில் அவர்கள் மறைந்திருந்த இடத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்து, அதிரடிச் சோதனையை நடத்தி அவர்களைக் கைது செய்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.